அறிமுகம்

tnuef2

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துவக்க கூட்டம் 14.08.2007 அன்று மதுரை வில்லா புரத்தில் உள்ள வீராங்கனை லீலாவதி அரங்கத்தில் நடைபெற்றது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்பது தலித் இயக்கங்கள், தொழிற்சங்கங்கள், வெகுசன அமைப்புகள், விவசாய சங்கங்கள் உள்ளிட்ட இயக்கங்களின் கூட்டு மேடையாக உருப்பெற்றது. இம் முன்னணியில் இணைந்துள்ள இயக்கங்கள் எல்லாம் சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஏற்கனவே போராடி வந்துள்ள அமைப்புகள் தான் என்றாலும் இவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடு மேலும் வீச்சோடும் வீரியத்தோடும் அமையும் என்பதே இதில் உருவாக்கத்திற்கான காரணமாகும்.

இதன் பெயரில் உள்ள “தீண்டாமை ஒழிப்பு” என்பது உடனடி கடமையை சுட்டிக் காட்டுவதே அல்லாது அதன் இலக்கு “சாதி ஒழிப்பு” என்பதே.

இத்தகைய புரிதலோடும் லட்சியத்தோடும் உருவாக்கப்பட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் மாநில மாவட்ட மட்டங்களில் சாதி பாகுபாடுகள், ஒடுக்குமுறைகளுக்கு எதிராக களம் கண்டு வரும் நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்து கைகோர்த்துள்ளன.

தமிழ்நாட்டில் தீண்டாமை, வன்கொடுமைகள் நிகழ்கிற இடங்களில் எல்லாம் தலையிடுகிற, தீர்வு காண்கிற அமைப்பாக இது பயணித்து வருகிறது. தீண்டாமை வடிவங்களை அம்பலப்படுத்துகிற கள ஆய்வுகள், நேரடி இயக்கங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி – உடனடி நிவாரணம் ஆகியன இதன் தொடர் செயல்பாடுகளாக உள்ளன.

மேலும் சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச் சட்டம், கழிவகற்றும் பணியில் முழுமையான இயந்திர மயம், அருந்ததியர் உள் ஒதுக்கீடு பாதுகாப்பு, எஸ்சி எஸ்டி துணைத்திட்ட அமலாக்கத்தை பலப்படுத்துதல், தலித் உள்ளாட்சித் தலைவர்களின் சுதந்திரமான செயல்பாடு, இட ஒதுக்கீடு அமலாக்கம், தனியார் துறை இட ஒதுக்கீடு உள்ளிட்ட பட்டியல் சாதி பழங்குடி மக்களின் அரசியல் சமூக பொருளாதார பண்பாட்டு தளங்களிலான கோரிக்கைகளை முன்னிறுத்தி பன்முனைகளில் செயல்பட்டு வருகிறது.

தற்போது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சிறப்புறு தலைவராக எஸ்.கே.மகேந்திரன் (முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்) தலைவராக த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளராக பி.சுகந்தி, பொருளாளராக கே.முருகன் ஆகியோர் செயலாற்றி வருகின்றனர்.