கொல்லாங்கரை பட்டியலின மக்களின் நடைபாதை ஆக்கிரமிப்பு மீட்பு! 

Author

TNUEF

Date Published

தீண்டாமை ஒழிப்பு முன்னணி - சிபிஐ(எம்) போராட்டம் வெற்றி!


கொல்லாங்கரை பட்டியலின மக்கள்  பயன்படுத்தி வந்த ஆக்கிரமிப்பு பாதை மீட்பு! 


தஞ்சாவூர் மாவட்டம், கொல்லாங்கரையில், நூறாண்டுக்கு மேல் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த நில வழி வண்டிப் பாதையை, தனிநபர் ஆக்கிரமித்தும், அவ்வழி பள்ளி செல்லும் மாணவர்களை சாதியை சொல்லி இழிவாக பேசியும் கட்டையால் தாக்கியும், அந்தப் பகுதி வழியாக நடந்து செல்ல முடியாமல் வேலி அமைத்தும் இடையூறு செய்து வந்தார்.  சாதிய வன்கொடுமை செய்து வந்த தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பலகட்ட போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


அதனொரு பகுதியாக பட்டியல் இன மக்களின் நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றும் போராட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் டிசம்பர் 17 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.  

போராட்ட அறிவிப்பு சுவரொட்டி


இதனைத் தொடர்ந்து டிச. 16 ஆம் தேதி தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் நித்யா தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், வருவாய் துறையினர் அளித்த உறுதியின்படி புதன்கிழமை, வருவாய் கோட்டாட்சியர் நித்யா, வட்டாட்சியர் சிவகுமார் மற்றும் டிஎஸ்பி, காவல் துறை ஆய்வாளர் முன்னிலையில் ஆக்கிரமிப்பை அகற்றி, பொதுமக்கள் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது.


நீண்ட காலமாக இருந்த பிரச்சனைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சிபிஎம் போராட்டத்தால் தீர்வு காணப்பட்டுள்ளதற்கு, இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.  


இந்நிகழ்வில், தலித் விடுதலைக்கான தேசிய மேடையின் அகில இந்திய துணைத் தலைவரும், சிபிஐ(எம்) மாநிலச் செயற்குழு உறுப்பினருமான கே.சாமுவேல்ராஜ், சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.சரவணன், கே.அபிமன்னன், எஸ்.செல்வராஜ், தஞ்சை ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ஆர்.கலைச்செல்வி, மாவட்டத் தலைவர் கே.பன்னீர்செல்வம், மாவட்டப் பொருளாளர் பி.சத்யநாதன், மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.பிரதீப் ராஜ்குமார், வீ.கரிகாலன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ராம், துரை.ஏசுராஜா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஒன்றியத் தலைவர் சி.சரிதா, சிபிஐ(எம்) ஒன்றியக்குழு உறுப்பினர்கள் விஜயகுமார், சண்முகவேல், நாகலிங்கம், இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் வசந்த் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.