தேர்தலுக்கு முன்பாக சாதி ஆணவக்கொலை தடுப்புச்சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

Author

TNUEF

Date Published

தேர்தலுக்கு முன்பாக சாதி ஆணவக்கொலை தடுப்புச்சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

பரிந்துரைகள் வெளியிட்டு நிகழ்வில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்.

தேர்தலுக்கு முன்புபாக சாதி ஆணவக்கெலை தடுப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டுமென்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி உள்ளது.

சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசு, நீதியரசர் கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைத்துள்ளது. இந்த ஆணையத்திற்கு முன்னணி சார்பில் வழங்கங்கப்பட உள்ள பரிந்துரைகள் வெளியீட்டு நிகழ்வு புதனன்று (ஜன.7) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது.

‘தமிழ்நாடு இணையர் தேர்வு உரிமை நிலைநாட்டுதல் மற்றும் ‘கௌரவம்’ என்ற பெயரிலான கொலைகள், குற்றங்கள் தடுப்பு (பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு) சட்டம் - 2026’ என்று பெயரிடப்பட்ட பரிந்துரைகளை எம்.சின்னதுரை எம்எல்ஏ வெளியிட்டார். அதனை ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட உசிலம்பட்டி திலீப் குமார், சூரக்கோட்டை அபிராமி, ஊத்தங்கரை அனுசியா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.


அம்பேத்கருக்கும் மநுவுக்குமான போராட்டம் :

இந்நிகழ்விற்கு தலைமை தாங்கி பேசிய முன்னணியின் துணைப் பொதுச் செயலாளர் கே.சுவாமிநாதன், “சாதி ஆணவக்கொலைக்கு எதிராக களப் போராட்டம், கருத்துப் போராட்டம், சட்டப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம். திலிப்குமார்  வழக்கு, சக்திவாகிணி வழக்கு தீர்ப்புகளில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தாக்கம் இருந்தது” என்றார்.


“குற்றங்களை தடுப்பதோடு, அதன் உள்நோக்கத்தையும் புரிந்து செயலாற்றக் கூடியதாக தற்போதுள்ள சட்டங்கள் இல்லை. தனிநபர் குற்றங்களை, சமூக ஒப்புதல் பெற்று செய்யப்படும் கூட்டுக்குற்றமாக கருதாத நிலை உள்ளது. குற்றத்தை தடுப்பது, பாதுகாப்பு, தண்டனை வழங்குவது, மறுவாழ்வு தருவது, சமூகத்துடன் உரையாடும் வகையில் ஆணவக்கொலை தடுப்புச்சட்டம் இருக்க வேண்டும்.

அம்பேத்கருக்கும் மநுவுக்கும் இடையேயான சித்தாந்தப் போராட்டம் என்ற வகையில் புதிய சட்டம் அமைய வேண்டும். அதற்கேற்ப பரிந்துரைகளை வரைவு சட்டமாக கொடுக்க உள்ளோம்” என்றார்.

தேர்தலுக்கு முன்பாக சட்டத்தை கொண்டு வர வேண்டும்

இந்நிகழ்வு அழைப்பிதழை பார்த்து தொடர்பு கொண்ட பேசிய நீதியரசர் கே.என்.பாஷா, பரிந்துரைக்காக ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்தார் என்பதை பகிர்ந்து கொண்டு, நோக்கவுரையாற்றிய முன்னணியின் பொதுச் செயலாளர் பி.சுகந்தி,  “ராஜஸ்தானை தொடர்ந்து தமிழகத்திலும் ஆணவக்கொலைக்கு எதிராக சட்டம் கொண்டு வர முயற்சிக்கிறோம். மாவட்டத்திற்கு ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும், பாதுகாப்பு அதிகாரி நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை அளித்துள்ளோம். பரிந்துரைகளை முழுமையாக ஏற்றால் அந்தச்சட்டம் சிறப்பானதாக அமையும்” என்றார்.

“வரவிருக்கிற சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே ஆணையத்தின் பரிந்துரைகளை பெற்று அரசு சட்டத்தை கொண்டு வர வேண்டும் அல்லது தேர்தலுக்கு முன்பாக சிறப்பு அமர்வு நடத்தி சட்டத்தை கொண்டு வர வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

 


கே.என்.பாஷா ஆணையம் அமைக்க மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொண்ட தொடர் நடவடிக்கை, எஸ்.சி/எஸ்.டி கண்காணிப்புக்குழு கூட்டத்தில் வலியுறுத்தியது, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சமூகத்தில் விவாதமாக மாற்றியது போன்ற அம்சங்களை சுட்டிக்காட்டி எம்.சின்னதுரை எம்எல்ஏ பேசியதாவது:

எஸ்.சி/எஸ்.டி வழக்கில் எதிர் வழக்கு போடுவது தொடர்கிறது. அபிராமி கணவர் ஆணவக்கொலை வழக்கில்,  வன்கொடுமைக்கும் கொலைக்கும் தொடர்பில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்து நியாயத்தை பெற்றுத்தருவோம்.

வன்கொடுமை வழக்கை விசாரிக்கும் 8  நீதிமன்றங்களில் நீதிபதிகள் கிடையாது. பொறுப்பு நீதிபதிகள் வருவதே இல்லை. வன்கொடுமை வழக்கில் சர்வசாதாரணமாக ஜாமின் தரப்படுகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்கறிஞரை, சாதி ரீதியாக பார்க்கின்றனர். அங்கேயும் சாதி விளையாடுகிறது.


ஜன 20 ந் தேதி ஆளுநர் உரைக்காக நடைபெறும் கூட்டத்தை தொடர்ந்து அடுத்து நடைபெறும் கூட்டத் தொடரிலேயே சட்டம் கொண்டு வர இந்த பரிந்துரைகள் உதவும். சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வலுவான குரலை எழுப்புவோம்” என்றார்.

“7 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த எஸ்.சி/எஸ்.டி கண்காணிப்பு குழுக்கூட்டத்தை, திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பலமுறை நடத்தி பல கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளது. இந்தக்கூட்டத்தில் சிபிஎம் வலியுறுத்தலையடுத்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதேபோன்று ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும்.

சிறப்பு உட்கூறு திட்டம் செயலாக்கத்தை கவனிக்க, கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையையும்  அரசு நிறைவேற்ற வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.


தலித் விடுதலைக்கான தேசிய மேடை (DSMM) அகில இந்திய துணை தலைவர் கே.சாமுவேல்ராஜ், தீஒமு மாநில சிறப்புத் தலைவரும், முன்னாள் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.கே.மகேந்திரன், மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, துணை பொதுச்செயலாளர் இ.மோகனா, மாநில செயலாளர்கள் கா.வேணி, ச.லெனின், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் கே.முருகன், வடசென்னை மாவட்ட செயலாளர் எம்.ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

 


பரிந்துரைகள் உருவாக்கும் பணியில் பங்கு வகித்த வழக்கறிஞர் டி.ஆர்.உதயகுமார், ஆலோசனைகள் வழங்கி செழுமைப்படுத்திய வழக்கறிஞர் கே.சி.காரல்மார்க்ஸ் ஆகியோர்க்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


சாதி ஆணவக்  கொலைகளை தடுப்பதற்கு ஏற்கனவே உள்ள கிரிமினல் சட்டங்கள் போதுமான வலிமையோடு இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு சாதி ஆணவக் கொலைகளின் பின்புலமாக உள்ள சமூக காரணிகள் கணக்கில் கொள்ளப்பட்டு வலிமையான சிறப்புச் சட்டம் தேவைப்படுகிறது. அத்தகைய சிறப்பு சட்டம் சாதி, மதம், கோத்திரங்கள், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் கடந்த இணையர் தேர்வு சுதந்திரத்தை அங்கீகரிப்பதோடு கௌரவம் என்ற பெயரிலான கொலைகள், குற்றங்கள் தடுப்பதாகவும், அத்தகைய இணையர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் மறுவாழ்வை விரைந்து வழங்குவதாகவும் அமைய வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட பரிந்துரைகள் வெளியிடப்பட்டன. இப் பரிந்துரைகள் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஓய்வு கே.என்.பாஷா அவர்களின் தலைமையிலான ஆணையத்திடம் வழங்கப்பட உள்ளது என்றும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.


மேலும் இதில் ஆதித்தமிழர் பேரவை கோவை.ரவிக்குமார், ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் கு.ஜக்கையன், திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி,  தியாகி இமானுவேல் பேரவை வி.பி.வேல்முருகன், தமிழ்நாடு பன்னியாண்டிகள்  சங்கம் டி.ஜி.சம்பத், தமிழர் உரிமை மீட்புக் களம் லெனின் கென்னடி, தலித் விடுதலை இயக்கம் தலித்.நதியா, விடுதலை வேங்கைகள் கட்சி தமிழன்பன், மக்கள் விடுதலை கழகம்  சீனிவாசராகவன்,  தந்தை பெரியார் திராவிடர் கழகம் டிங்கர் குமரன் ஆகியோர் பங்கேற்றனர்.