பத்திரிக்கை செய்திகள்

ஊத்தங்கரை சாதி ஆணவக்கொலை வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை!

Author

TNUEF

Date Published

tnuef2


கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை சுபாஷ் சாதி ஆணவக்கொலை வழக்கில் சாதி வெறியன் தண்டபாணிக்கு 3 ஆயுள் தண்டனை! 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை. தீஒமு, சிபிஐ(எம்) தொடர் போராட்டத்தின் வெற்றி!


அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கொல்லாபுரம் கிராமம் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அனுசுயா என்பவரும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள அருணபதி கிராமம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த சுபாஷும் (28 வயது) காதலித்து 27.03.2023 அன்று சுபாஷ் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி  சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.


இந்நிலையில் 14.04.2023 அன்று சுபாஷ் – அனுசுயா தம்பதியரை சுபாஷின் தந்தை தண்டபாணி விருந்தளிப்பதாக வஞ்சகமாக சுபாஷின் பாட்டி கண்ணம்மாள் வீட்டுக்கு அழைத்து வந்தார். 15.04.2023 அன்று அதிகாலை தண்டபாணி பட்டியல் சமூக பெண்ணை திருமணம் செய்த தனது மகன் சுபாஷை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார். அவரைத் தடுக்க முயன்ற தண்டபாணியின் தாய் கண்ணம்மாவையும் வெட்டி படுகொலை செய்தார்.

அனுசுயா கொடுங்காயங்களுடன் உயிர்பிழைத்தார். இது குறித்து ஊத்தங்கரை காவல் நிலையத்தில் குற்ற எண் : 205/2023 எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தில் 3(1)(r), 3(1)(s), 3(2)(v) வழக்கு பதிவு செய்யப்பட்டு,  கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று நேற்றைய தினம் (14.11.2025) குற்றவாளி தண்டபாணிக்கு மூன்று ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டுகள் கடுங்காவல்  தண்டனையும், ரூ.8,000 அபராதமும் மேலும் கொடுங்காயம் அடைந்த அனுசியாவிற்கு  ரூ.2.50 இலட்சம் மாவட்ட நிர்வாகம் வழங்கிட வேண்டுமென தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை   தமிழ்நாடு தீண்டமை ஒழிப்பு முன்னணி வரவேற்கிறது. இத்தீர்ப்பு சாதிஆதிக்க வாதிகளுக்கு ஒரு சம்மட்டி அடி!

நீதிக்கான தொடர் போராட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் துணை நின்றன.

9 அறுவை சிகிச்சைக்களுக்கு இடையில் மனம் தளராமல் வழக்கில் உறுதியாக நின்று நீதிக்காக போராடிய அனுசியாவிற்கும், சிறப்பாக வழக்கை திறம்பட நடத்திய அரசு சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த  வழக்கறிஞர்கள் டி.முரளி, கே.இளவரசன்,  சாம்ராஜ், என்.நவினா, கணேஷ், கோபி, ஆர்.அருள் ஆகியோருக்கும்  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வாழ்த்துக்கள்.

தொடர்ச்சியாக இவ்வழக்கிற்கும், மருத்துவ சிகிச்சைக்கும் உதவிய சிபிஐ(எம்), தீஒமு கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டக்குழுக்களுக்கும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலக்குழுவின் வாழ்த்துக்கள்.

தமிழகத்தில் சாதி ஆணவப் படுகொலையைத் தடுப்பதற்கு சிறப்பு சட்டம் கேட்டு  கடந்த 15 ஆண்டு காலமாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடர்ந்து போராடி வருகிறது. தற்போது தமிழக அரசு நீதிபதி கே.என்.பாஷா தலைமையில்  ஆணையம் அமைத்துள்ளது பாராட்டத்தக்கது.

ஆணையத்தின் ஆலோசனைகளை விரைந்து பெற்று வெகுவிரைவில் சாதி ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கு சிறப்பு சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் எனவும், மேலும் வழக்கில் பாதிக்கப்பட்ட அனுசியாவிற்கு அரசு வேலையும், வீடும் வழங்க வேண்டும் என  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

என்று மாநில தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.