நீதிபதி கே. என்.பாஷா ஆணையம் வலுவான சட்டம் இயற்ற பரிந்துரை வழங்க வேண்டும்!
Author
TNUEF
Date Published

சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் : நீதிபதி கே. என்.பாஷா ஆணையம் வலுவான சட்டம் இயற்ற பரிந்துரை வழங்க வேண்டும்!
தலித், சமூக நீதி, ஜனநாயக, இடதுசாரி அமைப்புகளின் கூட்டம் கோரிக்கை...

தமிழ்நாடு அரசு சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான தனிச்சட்டம் கொண்டு வருவது என்ற கோரிக்கையை கொள்கை அளவில் ஏற்று அதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கு நீதிபதி கே.என்.பாஷா தலைமையிலான குழுவை அமைத்துள்ளது. அதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கான தலித், சமூக நீதி, ஜனநாயக, இடதுசாரி அமைப்புகளின் கூட்டம் இன்று தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் பி.சுகந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிரான சட்டம், சாதி ஆணவக் குற்றங்கள், சாதி மதம் கோத்திரம் கடந்த இணையர் தெரிவு சுதந்திரம், பாதுகாப்பு, குற்றங்கள் முன்தடுப்பு, நிவாரணம், விரைவான நீதி, பொதுச் சமூகத்தில் கூருணர்வு உருவாக்குதல் ஆகியனவற்றை உள்ளடக்கிய விரிவான சட்டத்தை உருவாக்க வேண்டுமென்று இக்கூட்டம் கேட்டுக் கொண்டது.

2012 லிலேயே இந்தியச் சட்ட ஆணையம் சாதி ஆணவக் கொலைகளை உள்ளடக்கிய சிறப்புச் சட்டம் வேண்டுமென்று பரிந்துரைத்து 13 ஆண்டுகள் ஆகியும் ஒன்றிய அளவிலோ, எந்த ஒரு மாநிலத்திலும் இத்தகைய சிறப்புச் சட்டம் கொண்டு வரப்படவில்லை என்றும் அக் கூட்டம் சுட்டிக் காட்டியது. கூட்டத்தில் தீஒமு யின் துணைப் பொதுச் செயலாளர் க.சுவாமிநாதன் விவாதத்திற்கான முன் மொழிவை அறிமுகம் செய்தார். அதன் மீது பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இத்தகைய கருத்துக்கள் தொகுக்கப்பட்டு நீதிபதி கே.என்.பாஷா தலைமையிலான ஆணையத்திடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றும், நடப்பிலுள்ள சட்டமன்றத்தின் காலத்திற்குள்ளேயே அச்சட்டத்தை நிறைவேற்ற ஆவன செய்யுமாறும் கேட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசும் ஆணையத்திடம் விரைவாக பரிந்துரைகளை பெறுகிற வகையில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்று இக் கூட்டம் கேட்டுக் கொண்டது.

இக்கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கு.ஜக்கையன் (ஆதித் தமிழர் கட்சி), பேரறிவாளன் (தமிழ் புலிகள் கட்சி), எஸ்.ஆர்.பாண்டியன் (தமிழர் ஆட்சி கழகம்), விஸ்வநாதன் (கொங்கு விடுதலை புலிகள் கட்சி), லெனின் கென்னடி (தமிழர் உரிமை மீட்பு களம்), செல்வம் (ஆதித் தமிழர் பேரவை), சுறா.தங்கபாண்டியன் (தமிழர் சமூக நீதிக் கழகம்), தலித் நதியா (தலித் விடுதலை இயக்கம்), முனைவர் சீனிவாசராகவன் (மக்கள் விடுதலைக் கழகம்), பிரசாத் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), சந்திரசேகர் (திராவிடர் விடுதலை களம்), பால் பிரபாகரன் (திராவிட தமிழர் கட்சி), டி.ஜி.சம்பத் (பன்னியாண்டிகள் சங்கம்), தமிழன்பன் (விடுதலை வேங்கைகள் கட்சி), எம்.ஊர்காவலன் (தியாகி இமானுவேல் சேகரன் பேரவை) மற்றும் வழக்கறிஞர்கள் ஆர்.கிருஷ்ணன் Ex.MLA, சுப்பு முத்துராமலிங்கம், எம்.சுப்புராம், கே.பாண்டீஸ்வரி, கு.பழனி, அருண்குமார், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் கலையரசன், மாவட்ட செயலாளர் கே.காசி ஆகியோர் பங்கேற்று கருத்துரை ஆற்றினர்.
